மோனை வகைகள்
"அடிதொறும் தலை எழுத்து
ஒப்பது மோனை "
என்கிறது தொல்காப்பியம்.
அதாவது முதல் எழுத்து ஒன்றிவர
தொடுப்பது மோனை எனப்படும்.
இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று
மோனையாக வருதலும் உண்டு.
இன எழுத்துகளில் உயிர் எழுத்துக்களுக்கு
மூன்று இனங்களும்
மெய் எழுத்துக்களுக்கு மூன்று
இனங்களும் உண்டு.
உயிரெழுத்து இனங்களாவன:
1. அ , ஆ , ஐ , ஔ
2. இ , ஈ , எ , ஏ ,யா
3 . உ , ஊ , ஒ , ஓ
மெய்யெழுத்து இனங்களாவன :
1 . ஞ் , ந்
2 . ம் , வ்
3 . த் , ச்
இனி மோனை வகைகளைப் பார்ப்போம்.
மோனை இரண்டு வகைப்படும்.
1 . அடி மோனை
2. சீர் மோனை
அடிமோனை :
பாடலின் முதல் அடியின் முதல் எழுத்து
அடுத்த அடிகளின் முதல் எழுத்தாக
வருவது அடிமோனை எனப்படும்.
"தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் "
இக்குறளில் உள்ள இரண்டு அடிகளிலும்
முதல் எழுத்து 'த 'என ஒன்றுபோல்
வந்திருப்பதால் இது அடிமோனையாகும்.
சீர்மோனை :
ஓர் அடியிலுள்ள சீர்களின் முதல்
எழுத்து அனைத்தும் ஒன்றி வருவது
சீர் மோனை எனப்படும்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
இந்தக் குறளில் முதல் அடியின்
நான்கு சீர்களிலும் முதல் எழுத்து
'க' வந்துள்ளதால் இது
சீர் மோனையாகும்.
சீர் மோனை ஏழு வகைப்படும்.
1 . இணை மோனை
2. பொழிப்பு மோனை
3. ஒருஉ மோனை
4. கூழை மோனை
5. மேற்கதுவாய் மோனை
6 . கீழ்க்கதுவாய் மோனை
7. முற்று மோனை.
இணை மோனை : ( 1 , 2 )
முதலாம் இரண்டாம் சீர்களின்
முதல் எழுத்து ஒன்றி வருவது
இணை மோனை எனப்படும்.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரை இல்லினும் கெடும் "
இடிப்பாரை இல்லாத....இரண்டு சீர்களிலும்
அடுத்தடுத்து இ என்ற எழுத்து
வந்திருப்பதைக் காண்க.
பொழிப்பு மோனை : ( 1 , 3 )
முதல் சீரின் முதல் எழுத்தும்
மூன்றாம் சீரின் முதல் எழுத்தும்
ஒன்று போல் வருவது
பொழிப்பு மோனையாகும்.
"அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீரடி"
முதல் சீரின் முதல் எழுத்தும்
மூன்றாம் சீரின் முதல் எழுத்தும்
ஒன்று போல் வருவது
பொழிப்பு மோனையாகும்.
"அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீரடி"
முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும்
முதல் எழுத்து அ என்று ஒன்றுபோல்
வந்துள்ளமையால் இது பொழிப்பு
மோனையாகும்.
ஒருஉ மோனை: (1 , 4 )
முதல் சீரின் முதல் எழுத்தும்
நான்காம் சீரின் முதல் எழுத்தும்
ஒன்றுபோல் வருவது
ஒருஉ மோனையாகும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் "
முதல் சீரின் முதல் எழுத்து 'ஒ'
நான்காம் சீரின் முதல் எழுத்தும் 'ஒ'
என்று வந்திருப்பதைக் கண்டறிக.
கூழை மோனை : ( 1 , 2 , 3 )
ஒன்று , இரண்டு, மூன்று என
தொடர்ந்து முதல் மூன்று
சீர்களிலும் முதல் எழுத்து
ஒன்றுபோல் வருவது
கூழை மோனையாகும்.
"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்"
முதல் மூன்று சீரிலும் தா, த, த
ஆகிய எழுத்துக்கள் வந்துள்ளன.
மேற்கதுவாய் மோனை : ( 1, 3 , 4 )
ஒன்று, இரண்டு, நான்கு அதாவது
முதலாம் சீரின் முதல் எழுத்தும்
இரண்டாம் நான்காம் சீர்களின்
முதல்எழுத்தும் ஒன்றுபோல்
வருவது மேற்கதுவாய் மோனையாகும்.
"வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று "
ஒன்று மூன்று மற்றும் நான்காம்
சீர்களில் முதல் எழுத்து ஒன்றுபோல்
வந்துள்ளமையால் இது மேற்கதுவாய்
மோனை எனப்படும்.
கீழ்க்கதுவாய் மோனை : ( 1 , 2 ,4 )
முதல் சீரின் முதல் எழுத்து
இரண்டாம் நான்காம் சீர்களின்
முதல் எழுத்துகளோடு ஒத்து வருவது
கீழ்க்கதுவாய் மோனையாகும்.
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு "
ஒன்று ,இரண்டு மற்றும் நான்காம்
சீரின் முதல் எழுத்து 'இ 'ஒன்றுபோல்
வந்துள்ளதால் இது கீழ்க்கதுவாய் மோனையாகும்.
முற்று மோனை : ( 1, 2 , 3, 4 )
ஒன்று, இரண்டு , மூன்று, நான்கு என
முதல் அடியின் நான்கு சீர்களிலும்
முதல் எழுத்து ஒன்றுபோல் வருவது
முற்று மோனை எனப்படும்.
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை "
முதலடியின் நான்கு சீர்களிலும்' து'
என்ற எழுத்து ஒன்றுபோல் வந்துள்ளதால்
இது முற்று மோனை.
முதல் எழுத்து ஒன்றுபோல்
வருவது மோனை என்பது
இப்போது புரிந்திருக்கும்.