பாடலின் பொருள்:
இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன். அவன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுவன (மக்கள் பிணிக்கப்படுவதில்லை). சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் புலம்புவதில்லை). ஓடைகள் மட்டுமே கலக்கமடைகின்றன (மக்கள் கலக்கமடைவதில்லை). புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றது (மக்கள் அடைக்கப்படுவதில்லை).
மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன (மக்கள் வடுப்படுவதில்லை). மலர்கள் மட்டுமே. பறிக்கப்படுகின்றன (மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில்லை). காடுகள் மட்டுமே கொடியவனாய் (கொடி உடையனவாக) உள்ளன (மக்கள் கொடியவராய் இல்லை). வண்டுகள் மட்டுமே கள் - (தேன்) உண்ணுகின்றன (மக்கள் கள் உண்பதில்லை). மலை மூங்கில் மட்டுமே உள்ளீடு இன்றி வெறுமையாய் இருக்கின்றது(மக்களிடையே வெறுமை இல்லை). வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன (வேறு போர் இல்லை).
நீண்ட மலைகளே இருள் சூழ்ந்தவையாயிருக்கின்றன (நாட்டில் வறுமை இருள் இல்லை). இளமான்களின் கண்களே மருள்கின்றன (மக்கள் கண்களில் மருட்சியில்லை). குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன (மக்கள் நிலை பிறழ்வதில்லை). செவிலித்தாயரே சினங் காட்டுவர் (வேறு யாரும் சினம் கொள்வதில்லை). புலவர் பாட்டில் மட்டுமே பொருள் (பொதிந்து) இருக்கின்றது (யாரும் பொருளை மறைப்பதில்லை). இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப்பாடுவர் (தேவையற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை). இராசராசன் காக்கும் திரு நாட்டின் இயல்பு இது.
அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான்.