ஏழாம் வகுப்பு
தமிழ்
செய்யுள் பகுதி (இயல் 8)
புதுமை விளக்கு
பாடலின் பொருள்
பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.
ஆசிரியர் குறிப்பு
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடலின் பொருள்ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும். ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.
ஆசிரியர் குறிப்பு
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.
அறம் என்னும் கதிர்
பாடலின் பொருள்
இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
ஆசிரியர் குறிப்பு :
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.
மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்