ஏதிலிக்குருவிகள்
குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர் புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின.
- அழகிய பெரியவன்