திங்கள், 4 ஏப்ரல், 2022

தாய்மைக்கு வறட்சி இல்லை!

 தாய்மைக்கு வறட்சி இல்லை!




கர்நாடக மாநிலத்தின் வடமாவட்டத் தலைநகரான குல்பர்கா நகரைத் தாண்டிய அந்த தேசிய நெடுஞ்சாலை, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் காடுகளுக்கு மத்தியில் மலைப்பாம்புபோல் நெளிந்து கொண்டிருந்தது... நகரச் சந்தடியில்லாமல் நிசப்தம் நிலவிய அந்தக் காட்டின் மவுனம். உள்மனதிற்குப் பேரிரைச்சலாய் ஒளித்துக் கொண்டிருந்த மத்தியான வேளையில்...


இந்தச் சாலையின் வலதுபக்கம் முள்வேலி போட்ட ஒரு தோட்டம்.

மண்ணவதாரம் எடுத்தது போன்ற பாதை அந்தத் தோட்டத்திற்கு மத்தியில் அரைகிலோ மீட்டர்வரை ஓடிக் கொண்டிருந்தது. இந்தத் தோட்டத்திற்கு முன்பகுதியிலேயே ஒரு கல்மாளிகை. இதையொட்டி, முன்னாலும் பின்னாலும் இரண்டு கம்புகள் தூக்கி நிற்க முக்கோண வாசல் கொண்ட குடிசை. குடிசைக்குக் கதவு கிடையாது. அது தேவையும் இல்லை. அதைப் பார்த்தால், உள்ளே இருப்பது வெளியே போவதற்கு முகாந்திரம் இல்லை. வெளியே இருப்பது உள்ளே போகாமல் இருப்பதற்குத்தான் கதவு தேவை, அந்தக் குடிசைக்கு முன்னால் அந்தக் குடும்பமே சுருண்டு கிடந்தது.


அவன் குப்புறக் கிடந்தான். தார்ப்பாய்த்த நாலு முழவேட்டி, முருங்கைக் கொம்பாய்த் தோன்றிய அவன் பின் கால்களைக் காட்டியபடியே இடுப்பைப் பற்றி இருந்தது. இரண்டு கரங்களையும் குறுக்காய் மடித்து மூச்சிழுத்துக் கொண்டிருந்தான். அவன் அருகே அவள் படுத்திருந்த விதத்தைப் பார்த்தால், அவள் மூக்கில் கை வைத்தால்தான் எந்த நிலையில் இருக்கிறாள் என்று சொல்ல முடியும். கரி கரியாய். கருப்புக் கருப்பாய். சாலைபோடப் பயன்படுத்தப்படும் தாரையே நெய்தது போன்றிருந்தது அவள் புடவை. இவள் தலைமாட்டில் இரண்டு சாம்பல் நிற நாய்க்குட்டிகள். இரண்டும் சடை நாய்கள்.


கால்மாட்டில் மூன்று வயதுப்


பெண்குழந்தை ஒருச்சாய்த்துக் கிடந்தாள். வயிற்றைக் கைகளால் அணைமுறித்துத் தூக்கத்தில் துக்கத்தைக் கலைத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஒருவயதுக் குழந்தை ஒன்றுதான், ஈரத் தடயங்கள் ஏதும் இல்லாத ஈயத்தட்டை எடுத்து. 'ஏம்மா என்னைப் பெத்தே' என்பது மாதிரி அம்மாவின் வயிற்றில் அடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பேரிரைச்சலைக் கேட்டு அவள்கூடக் கண்விழித்தாள். கண் முன்னால் தன்னையும், தன்னவர்களையும் நோக்கி மோதிக் கொல்லப்போவதுபோலப் பாய்ந்து வந்த அந்த ஜீப்பிற்குப் பயந்து, கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்வதுபோல் அனிச்சையாக உருண்டு உருண்டு உடம்பைச் சுழற்றினாள். கணவனின் கையையும் பிடித்து அவனையும் அவள் உருட்டிப் போட்டாள். இதற்குள் அவன் துடித்தெழுந்தான். அந்தச் சடை நாய்க்குட்டிகள் பாய்ந்து வந்த ஜீப்பை வழி மறிப்பதுபோல் முன்னால் போய் நின்றபடி பயமில்லாமல் குலைத்தன. 'எம்பி எம்பிக்' குதித்தன.


இதற்குள். ஜீப் புழுதி பறக்க நின்றது. புழுதி மண் பட்ட கண்களைத் துடைத்தபடியே அவள் கீழேயே கிடந்தாள். பிறகு கணவன் கைதூக்கிவிட எழுந்த அவள் ஜீப்காரர்களைக் கோபமாகப் பார்த்தாள்.


அவள் தனது செல்லாக் கோபத்தைப் பொறுமையாக்கியபோது. ஜீப்பின் முன் இருக்கையில் இருந்து குதித்த ஒருவரை. பின்னால் இருந்து குதித்தவர்கள் பயபக்தியுடன் சூழ்ந்திருந்தார்கள். அந்த அதிகாரிக்கு நாற்பத்து ஐந்து வயதிருக்கலாம். அவரை மற்றவர்கள் பயத்துடன் பார்ப்பதைப் பார்த்த அவனுக்குப் பயம் பிடித்தது. மனைவியை ஆணையிடும் பாவனையில் நோக்கி, அப்புறம் அடிபணியும் தொனியில் கண்களைக் கீழே போட்டு. குடிசையை நோக்கி நடந்தான். எங்கிருந்தோ கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்திருந்த மண்பானைத் தண்ணீரைக் கொண்டு வந்தான்.

அந்த மாளிகைப் படிக்கட்டுகளில்


அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்ப உட்கார்ந்தார்கள். பியூன், ஒவ்வொருவருக்கும் அந்தஸ்துபடியே வாழையிலையைக் கொடுத்தார். அவர் போட்ட உணவுப் பண்டங்களும் அந்தஸ்து கனத்தைக் காட்டியது. அப்போது, மண்பானையை அங்கே கொண்டு வந்த தோட்டக்காரன், அதைத் தரையில் இறக்கி வைத்துவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்த போது, அந்த அதிகாரி அடைக்கோழி மாதிரி கத்தினார். அவன் திரும்பிப் பார்த்தபோது, அவனைத் தன்னருகே வரும்படி சைகை செய்தார். உடனே பியூன் பாதிப் பிரியாணியோடு அந்தத் தட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் அதைத் தயங்கித் தயங்கி வாங்கி மற்றவர்கள் தட்டில் பரிமாறப் போனபோது அந்த அதிகாரி அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். இலையில் இருந்த ஒரு முட்டையை எடுத்து அந்த சைவப் பிரியாணிக்கு வெள்ளை மகுடம் சூட்டி, இதர வகையறாக்களையும் அதில் அள்ளிப்போட்டு, அவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளினார்.



அவனோ அவரிடம் ஏதோ சொல்லப் போனான். பிறகு தன்மானத்தை வயிற்றுக்குள் தின்றபடியே மனைவியை நோக்கி நடந்தான். அவள் அவனைக் கண்களால் கண்டித்தாள். பிறகு தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டித்தாள். ஏதோ கோபம் கோபமாய்ப் பேசினாள். என்ன பேசியிருப்பாள்?


அந்த அதிகாரி யோசித்தார். திடீரென்று எழுந்தார். அவர் எழுந்ததும் கூடவே எழப்போன மற்றவர்களைக் கையமர்த்திவிட்டு. சாப்பாட்டுத் தட்டுடன் அந்தக் குடும்பத்தை நோக்கி நடந்துவர பாதிவழியில் நின்று கவனித்தார். கணவனுடன் இதுவரை வாதாடியவள். சுற்றும் முற்றும் பார்த்தாள். மூன்று வயது மகள் அப்பா பக்கம் நின்றபடி அம்மாவைக் கோபம் கோயமாய்ப் பார்த்தாள். ஒருவயதுக் குழந்தை அந்த வட்டத்தட்டை நோக்கி, 'நிலவே நிலவே வா' என்பது போல் கையாட்டியது. அந்த நாய்க்குட்டிகள் அவனைப் பார்த்து வாலாட்டின. அவளைப் பார்த்து வேசாய்க் குரைத்தன.


அவள் புரிந்துகொண்டாள். அவர்களைப் பற்றி மட்டுமல்ல தன்னைப் பற்றியும். அவள் வயிற்றிலும் பசி முள் குத்தி வலியெடுத்தது. தானே எழுந்து கணவன் கையில் இருந்ததை, தன் கையில் கொண்டு வந்தாள். குழந்தைகள் வாயாட்டின. நாய்கள் வாலாட்டின. அப்பளம் மாதிரி -அதேசமயம் அதைப்போல் மூன்று பங்கு கனம் கொண்ட வட்ட சப்பாத்திகளைக் கொண்டு வந்தாள். அவற்றில் ஆளுக்கு இரண்டைக் கொடுத்தாள். அவற்றின் மேல் வெஜிடபிள் பிரியாணியையும், உருளைக்கிழங்குப் பொரியலையும் எடுத்து வைத்தாள்.


காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அவர்கள், அதை, தீர்ந்துவிடக்கூடாதே என்று மெல்ல மெல்லச் சுவைத்தார்கள். செல்லமாகக் குரைத்த அந்த நாய்களுக்கு மட்டும் அவ்வப்போது கவளங்களைப் போட்டபடி அவனும் குழந்தைகளும் வாயசைத்தபோது அவள் மனம் அசைத்தாள். அவர்களை அனுதாபத்துடன் பார்த்தாள்.'இப்போ இப்படிச் சாப்பிடுகிறீர்களே... ராத்திரி என்ன செய்வீர்கள்?' என்ற பார்வை. இனிமேல் இதைக் காண முடியாது என்பதால்தான். இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுகிறீர்களோ என்பது போன்ற கவலைப்பார்வை... அவர்களைப் பார்த்துத் தனக்குள் ஏற்பட்ட பசிப்பார்வை...


அவள் அந்த ஈயத்தட்டை எடுத்து ஒரு கவளத்தை உருட்டி வாய்க்குள் திணித்தாள். உலர்ந்துபோய் இருந்த அவள் தொண்டை அதை உள்வாங்க மறுத்தது. அவள் தொண்டைக்குழி அதனால் அவறுவதுபோல் சத்தமிட்டது. அந்த சப்தம் நிற்பதற்கு முன்னால், பாதிவழியில் நின்ற அதிகாரி அங்கே வந்தார். கையில் வைத்திருந்த ஒரு தம்ளர் தண்ணீரை அவளிடம் நீட்டினார். உடனே அவள் அவரைப் பார்த்து லேசாய்க் கூசினாள். அந்த அதிகாரி தான் பேசுவது தமிழ் - அவளுக்குப் புரியாத மொழி என்பதைப் புரியாமலே தழுதழுக்கப் பேசினார்.


உன்னை மாதிரியே கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத்தான் அம்மா பிறந்தேன். உன்னை என் தாயாய் நினைத்துத்தான் கொடுக்கேன்".


அவளுக்கு, அவர் வார்த்தைகள் புரியவில்லை. ஆனால், அதன் ஆன்மா தெரிந்தது. அந்தச் சக்கைச் சொற்களுக்குள் உள்ளாடிய மனிதநேயம் அவளுக்குப் புரிந்தது. லேசாய்ச் சிரித்தாள். பிறகு சசுஜமாக சாப்பிடப் போனாள். இதற்குள் அந்த அதிகாரி அவள் கணவனிடம், அரைகுறை இந்தியில் கேட்டார்.


"என்னப்பா இது? எங்கே பார்த்தாலும் ஒரே சுடுகாடாய்க் கிடக்குது... இதோ இந்த திராட்சைக் கொடிகூட இரும்புக் கம்பிகளில் கருகிக் கிடக்குதே... பச்சை இலைகள் பழுப்பேறிப் போயிருக்குதே..."


"அதை ஏன் கேட்கறீங்க? இந்த மாதிரி பஞ்சத்தை நான் பிறந்த இந்த முப்பது வருஷத்திலே பார்த்ததில்லை. மழை இப்போ மாதிரி எப்பவும் ஏமாற்றுனது இல்லை. இந்த நிலத்தை ஆண்டாண்டு காலமா நான்தான் கவனித்து வரேன். என்னுடைய எஜமானர். 'தோட்டத்திலே பிரயோசனமில்லேடா சென்னப்பா... இனிமேல் உனக்குச் சம்பளம் கிடையாது. இங்கே இருந்தால் இரு. இல்லன்னா உன் ஆட்களை மாதிரி பஞ்சம் பிழைக்க நாடோடியாய்ப் போயிடு' என்றார். இது என்ன சாமி நியாயம்? என் வேர்வையில் பழுத்த திராட்சையை விற்ற, எஜமானரு லட்சம் லட்சமாய் சம்பாதித்தபோது, சம்பளத்துக்கு மேலே கூட்டிக் கொடுக்கவில்லை. லாபம் வந்தப்போ கூலியைக் காட்டாதவர், நஷ்டம் வரும்போது கழிக்கப்படாது பாருங்கோ.. ஆனா, இவரு சம்பளத்திலே கழிச்சு தந்தாக்கூடப் பரவாயில்லை. என்னையே கழிக்கப் பார்க்காரு. இது எந்த நியாயத்திலே சேர்த்தி சாமி?"


அந்தக் கிராமத்துக் கூலியாளின் எதார்த்தமான பேச்சைக் கேட்டு மலைத்துப்போன அதிகாரியின் காலுக்குள் அந்த இரண்டு சடை நாய்க்குட்டிகளும். நுழைந்து நுழைந்து சுற்றி வந்தன.

அவர் இலையில் கை வைக்கும்போது அந்த கையையும், அந்தக் கை வாய்க்குப் போகும்போது அந்த வாயையும், அந்தக் கைபோன போக்கிலேயே உயரப் பார்த்தன. உடனே அவர் இலையில் இருப்பதைத் தரையில் இறக்குவார். இப்படி அவர் எடுத்தெடுத்துப் போடுவதும். அதை நாய்க்குட்டிகள் குலைத்துக் குலைத்துத் தின்பதுமாய் இருந்தன. ஒரு கட்டத்தில் அவர் இலையில் பார்த்தார். பகீரென்றது. அதில் கொஞ்சம்தான் இருந்தது. நாய்கள் மீண்டும் குலைத்தன. வாலாட்டின. அவருக்கு இது அதிகபட்சமாகத் தெரிந்தது. அவரை விடவில்லை. இடுப்பிலே எகிறின. காலில் இடறின.


திடீரென்று ஒரு சின்னக் கல் ஒரு நாய்க்குட்டி மீது விழுந்தது. ஒரு மண்கட்டி இன்னொரு குட்டிமீது விழுந்தது. மண்பட்ட நாய்க்குட்டி புத்திசாலி. எறிந்தவளை ஓரங்கட்டிப் பார்த்தது. அவளோ கோபம் கோபமாய்க் குரவிட்டபடியே கையைத் தூக்கியபோது, அது சிறிது ஓடிப்போய், ஓர் இடத்தில் மண்ணாங்கட்டியாய்ப் படுத்தது. திடீரென்று அவள் அங்கே ஓடிவந்தாள். அந்த நாயின் கழுத்தைப் பிடித்துச் சற்றுத் தொலைவில் மெதுவாகத்தான் தூக்கிப் போட்டாள். கீழே விழுந்த அந்தச் சின்ன குட்டியோ சுரணையற்றுக் கிடந்தது. உடனே அவள் அலறியடித்து நெருங்கினாள். அதுவோ அவள் தன்னை மீண்டும் தாக்க வருவதாய் அனுமானித்து, ஒரு காலைத் தூக்கியபடியே திராட்சைத் தோட்டத்திற்குள் ஓடியது. அப்புறம் அதன் ஓல ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அவள் வயிற்றுக்கும் சூடு பிடித்தது. பட்டினியால் பழக்கப்பட்ட மரத்துப்போன அவள் வயிறு இப்போது வாயை வம்புக்கிழுத்தது. இரண்டு கவளம் மட்டுமே எடுக்கப்பட்ட அந்தத் தட்டை அவள் ஆசையோடு பார்த்தாள். பிறகு அதைக் குழந்தை மாதிரி மடியில் வைத்துக்கொண்டு ஒரு கவளத்தை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. தட்டில் இன்னும் முக்கால்வாசிக்கு மேலேயே இருந்தது. உண்டு... உண்டு... சுவையில் சொக்கிச் சொக்கி அவள் லயித்தபோது அந்த நாயின் ஓல் ஒலி, அவளைச் சுண்டி இழுத்தது. 'எம்மா நீயா இப்படிச் செய்துட்டே...?' என்பதுபோல் அது ஒலித்தது. அவள் தட்டைக் கீழே வைத்துவிட்டு, எச்சில் கையைத் தரையில் ஊன்றியபடியே எழுந்தாள். சுற்றும் முற்றும் கண்களைச் சுற்றவிட்டாள். காய்ந்துபோன திராட்சைக் கொடிகள் படர்ந்த கம்பிப் பந்தலைத் தாங்கிய ஒரு கல்தூணின் கீழே அந்த நாய்க்குட்டி ஈனமுனகவாய்க் கிடந்தது. அவளைப் பார்த்து அப்போதும் வாலாட்டியது.


அவள் அந்த நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவி விட்டாள். அந்தக் குட்டியைத் தன் மடியில் சம்மணக் கால்களை அங்குமிங்குமாய் ஆட்டி அதைத் தாலாட்டினாள். பிறகு அந்தத் தட்டைத் தன் பக்கமாய் இழுத்து, அதில் இருந்ததைக் கவளம் கவளமாய் உருட்டி, அந்தச் சின்னக் குட்டிக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அந்தச் செல்லக்குட்டியோ பிகு செய்தபடியே அவள் கையை வாவகமாய் விட்டுவிட்டு, கவளத்தை மட்டும் கவ்விக் கொண்டே இருந்தது.


அந்தத் தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவள் தாய்மை கூடிக்கொண்டே இருந்தது.



கிளிக் செய்யுங்கள்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...