காற்றே வா!
நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. 'நீரின்றி அமையாது உலகு' என்றாற் போல 'காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்' என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.
காற்றே,வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;
இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே,வா.
எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.
பாரதியார் கவிதைகள்
சொல்லும் பொருளும்:
மயலுறுத்து - மயங்கச்செய்
ப்ராண – ரஸம் - உயிர்வளி
லயத்துடன் - சீராக
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் -கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
மேலும் அறிய... TNPSC CHANNEL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக