கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வாலி வழிபட்ட தலமாதலால் வாலீஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வாலி மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் வாலி சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட இராவணன் தன்னை விட சிறந்த சிவ பக்தனான வாலி மீது பொறாமை கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க எண்ணி பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க முயற்சித்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்து விட்டார். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
பலன்கள்:
தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், சனி தோஷ நிவர்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் விழுப்புரத்திலிருந்து 7KM தொலைவில் கோலியனூர் உள்ளது. விழுப்புரம் புதுச்சேரி மார்கத்தில் செல்லும் அணைத்து பேருந்துகளும் கோலியனூரில் நின்று செல்லும்.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். விழுப்புரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்
கோவில் வீடியோ பதிவு பார்க்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக